புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியத் திருநாடு மிகப்பெரிய பாரம்பரியத்திற்கு சொந்தமானதாகும். அதேபோல் நம் நாட்டின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், நம்பிக்கைகளும் பல்லாயிரமாண்டு காலத்திற்கு சொந்தமானதாகும். இந்தியாவில் இரண்டு பெரிய இதிகாசங்கள் உள்ளன. ஒன்று இராமாயணம்; இன்னொன்று மகாபாரதம். இரண்டும் இந்தியாவெங்கும் பரந்து விரிந்து கிடைக்கக்கூடிய கோடானகோடி மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள அம்சங்களாகும்.
அந்த வகையில் இராமாயணத்தின் கதாநாயகனாக விளங்கிய இராமர் அயோத்தியில் பிறந்து ஆட்சி செய்தார் என்பதே பெரும்பாலான இந்துக்களின் நம்பிக்கையாகும். அவர் பிறந்த இடத்தில் வழிபாடு நடத்தப்பட்டு வந்த கோவில் இடிக்கப்பட்டு, 500 வருடங்களுக்கு முன்பு மசூதி கட்டப்பட்டது என்பது இந்துக்களின் வாதமாகும். அங்கிருந்த மசூதி அகற்றப்பட்டு, மிகப்பெரிய சட்டப் போரட்டத்திற்கு பிறகு, இப்பொழுது இராமர் கோவில் கட்டுவதற்காக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா மீது படையெடுத்த பெரும்பாலானவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை கொள்ளையடித்தும், சூறையாடியும், தகர்த்தெறிந்தும் அத்தலங்கள் மீது அவர்களின் வழிபாடு தலங்களை நிறுவினர். இப்பொழுது 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு, இராமர் பிறந்த இடத்தில் ”குழந்தை இராமர் கோயில்” கட்டப்படுகிறது. இந்துக்களின் மனதில் நீண்ட நாட்களாக இருந்த பல வடுக்களில், இப்போது ஒரு வடு நீக்கப்பட்டிருக்கிறது.
இது இந்துக்களின் அடையாள மீட்பு தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இத்தருணத்தில் அயோத்தி அடையாள மீட்பு போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவரும் நன்றிக்கும், பாரட்டுக்கும் உரித்தானவர்கள் ஆவர்.
அயோத்தில் ”குழந்தை இராமர் கோவில்” என்பது வழிபாட்டு அடையாளமாக மட்டும் இல்லாமல் சாதி, மொழி, இனம் என பிரிந்து கிடக்கக்கூடிய இந்திய மக்களை ”இந்துக்கள்” என்ற ஒற்றை அடையாளத்தில் தூக்கி நிறுத்துவதற்கும், உலகிற்கு பறைசாற்றுவதற்குமான அடையாளமாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை.
அடிக்கல் நாட்டிய மோடி அரசு குறிப்பிட்ட காலத்தில் இராமர் கோவிலை கட்டி எழுப்பி “அயோத்தியில் இராமர்” என்ற இலட்சியத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதே உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஆகும். இதுவே உலகெங்கும் வாழக்கூடிய தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் உணர்வுகளும், எதிர்பார்ப்பும் ஆகும். என்று கூறியுள்ளார்.
செய்தி ; நெல்லை சிவா