Dr. K. Krishnasamy

வனக்காவலர்களை பாதுகாக்க, தென்காசி காவல்துறை வரிந்து கட்டுவது ஏன்? – டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

Dr Krishnasamy Political Puthiya Tamilagam

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை!

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய விவசாயி அணைக்கரைமுத்து. கடந்த 22-ஆம் தேதி 9.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை தட்டி எழுப்பி கடையம் வனச்சரக காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர். அடுத்த மூன்று மணி நேரத்தில் அவர் பிணமாக கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது உடலில் 18 காயங்கள் இருந்ததாக அவருடைய மூத்த மகன் நடராஜன் தெரிவித்துள்ளார். 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என குடும்பத்தினரால் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட பின்பும் அதையும் மீறி பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக எப்படியாவது அணைக்கரைமுத்துவின் குடும்பத்தாரை நிர்பந்தம் செய்து அவரது சடலத்தை ஒப்படைத்து, எரித்துவிட்டு அனைத்து தடயங்களையும் அழித்து விட துடிக்கிறார்களே தவிர, அவருடைய மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அணைக்கரைமுத்துவின் குடும்பத்தோடு குடும்பமாக கடந்த நான்கு தினங்களாக அக்கிராமத்தில் குளிக்க, மலஜலம் கழிக்கக் கூட இடமில்லாத நிலையிலும், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அவரது குடும்பத்திற்கு ஆறுதலாகவும், பக்கபலமாகவும் இருக்கிறார்கள். 23-ஆம் தேதி இரவு புதிய தமிழகம் கட்சியின் மாநில நிர்வாகிகளை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேத பரிசோதனை அறிக்கையின் ஆரம்பக் கட்ட அறிக்கை தரப்படும் என கூறி சென்று, மூன்று தினங்களாகியும் இன்று வரை குடும்பத்தாரிடம் பிரேத பரிசோதனை அறிக்கையை தர மறுக்கிறார்கள். ஆனால், தங்களுடைய தந்தைக்கு என்ன நேர்ந்தது? என்று கூட தெளிவாக தெரிந்து கொள்ள அவகாசம் கொடுக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு அதிகாரியை அனுப்பி சிறிதும் மனிதாபமற்ற முறையில் விவசாயி முத்துவின் உடலை வாங்க காவல்துறையால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வனக்காவலர்களுடைய காவலில் நிகழ்ந்த மரணம். எனவே, தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்கக் கூடிய வகையில் பிரேத பரிசோதனை அறிக்கையை அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் தரவேண்டியது தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் செய்ய வேண்டிய கடமையாகும். ஆனால் எவ்விதமான சட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் தன்னிச்சையாக பிரேத பரிசோதனை செய்தது போல, தற்போது காவல்துறையினரின் மிருக பலத்தை வைத்து  அவருடைய சடலத்தையும் எரித்து விட நினைக்கிறார்கள். 

#JusticeForAnaikaraiMuthu

கரோனா ஊரடங்கு உத்தரவுகளாலும், அதன் கட்டுப்பாடுகளாலும் மக்கள் வீதிக்கு வர முடியாது என்ற சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அடக்குமுறையை ஏவி உண்மையை மூடி மறைக்கலாம் என்றால், அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். 1995-ஆம் ஆண்டு கொடியங்குளம் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை மூடி மறைக்கவும் இதே பாணியைத்தான் அன்றைய அரசு கடைபிடித்தது, விளைவு அந்த அரசு எப்படிப்பட்ட பாதிப்புக்கு ஆளானது என்பதை உலகறியும். புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி பொதுமக்களுக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை; சாலை மறியல் செய்யவில்லை. மாறாக கிராம மக்களோடு மக்களாக அமர்ந்து விவசாயி  முத்துவின் மரணத்திற்கு நியாயம் மட்டுமே கேட்கிறார்கள். அப்படி அமைதி வழியில் போராடும் புதிய தமிழகம் தொண்டர்களை அதிகார பலத்தை பயன்படுத்தி அப்புறப்படுத்தவும், விவசாயி முத்துவின் குடும்பத்தாரை தனிமைப்படுத்தி, அச்சுறுத்தி பிறகு சடலத்தை அவர்களுடைய கையில் திணிக்க எடுக்கும் முயற்சிகள் கடும் எதிர் விளைவுகளை உண்டாக்கும். எனவே, காவல்துறை அந்த மக்களுடைய மிக எளிய கோரிக்கையான பிரேத பரிசோதனை அறிக்கையை அவர்களிடத்தில் தந்திடவும், தேவைப்பட்டால் மறு பிரேத பரிசோதனை செய்திடவும் துணை நிற்க வேண்டுமே தவிர அவர்களுக்கு எதிரான வழிமுறைகளை கையாளக்கூடாது.

 சாத்தான்குளத்தில் 2000 பேர் கூட அனுமதித்ததையும், இங்கு 100 பேர் கூட அனுமதிக்காமல் காவல்துறை அட்டூழியம் செய்வதையும் அனைத்து மக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சர்வாதிகார எண்ணத்தோடு நடத்தப்படும் இந்நிகழ்வை புதிய தமிழகம் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் மீது கை வைப்பதோ அல்லது முத்துவின் குடும்பத்தாரை கட்டாயப் படுத்துவதோ அனைத்து தேவேந்திர வேளாளர் மக்கள் மத்தியிலும்; ஏழை, எளிய விவசாயிகள் மத்தியிலும், தமிழகமெங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கும். 

எனவே, காவல்துறை அடக்கு முறையை கைவிட்டுவிட்டு குடும்பத்தினரிடம் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக வழங்கவும், அதன் அடிப்படையில் சமந்தப்பட்ட வனக்காவலர் மீது கொலை வழக்கு (302) பதிவு செய்யவும் வலியுறுத்துகிறேன். என்று கூறியுள்ளார்.

JusticeForAnaikaraiMuthu

https://twitter.com/hashtag/justiceforanaikaraimuthu


1 thought on “வனக்காவலர்களை பாதுகாக்க, தென்காசி காவல்துறை வரிந்து கட்டுவது ஏன்? – டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *