டாக்டர் கிருஷ்ணசாமி

கடையம் விவசாயி அணைக்கரைமுத்து கொலைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டம்!

Dr Krishnasamy Political Puthiya Tamilagam

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரைமுத்து. வயது – 65. அவர் வழக்கம்போல் ஜீலை 22 ம் தேதி, தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு உறங்கி கொண்டிருந்தார். அவரை கடையம் சரகத்தை சார்ந்த வனக்காவலர்கள் நெல்லை நாயகம் உட்பட 5 பேர் அணைக்கரைமுத்துவின் குடும்பத்தை செர்ந்த எவருக்கும், எந்த தகவலும் கொடுக்காமல், மேல் சட்டை கூட அணிய விடாமல், அவர்களுடைய தோட்டத்தில் வேலி அமைத்தது சம்பந்தமாக கடையம் அருகே சிவசைலம் என்ற பகுதியில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இரவு 12 மணியளவில் மூன்று வனக்காவலர்கள் வந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த அவருடைய துணைவியார் மற்றும் மகளை தட்டி எழுப்பி அவருடைய சட்டையை கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர். அதையெடுத்து ஒன்றரை மணி நேரம் கழித்து, அவருடைய மூத்த மகன் நடராஜனை வனக்காவலர்கள் தொடர்பு கொண்டு “உங்களுடைய தந்தை அணைக்கரைமுத்து ஆபத்தான நிலையில் உடல் நலக் குறைவாக உள்ளார். அவரை உடனடியாக அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கின்றனர். 
இரவு 1.00 மணியளவில் தனது நண்பர் ஒருவரின்  வாகனத்தை அமர்த்திக்கொண்டு தந்தையை காண சிவசைலத்திலுள்ள வனச்சரக அலுவலகத்திற்கு சென்ற போது எதிரே, வனக்காவலர்கள் அவர்களுடைய வாகனத்தில் அணைக்கரைமுத்துவை அழைத்து வந்திருக்கின்றனர். வாகனத்தை நிறுத்தி, அவர்களுடைய வாகனத்தில் ஏறிக்கொள்ளுமாறும், விவசாயி அணைக்கரைமுத்து நினைவற்று இருந்ததால் தாங்கி பிடித்து கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.  அப்பொழுதே, அணைக்கரைமுத்து எவ்வித பேச்சு மூச்சு இன்றி இருந்ததையும், அவருடைய வெற்று உடம்பில் 18 காயங்கள் இருந்ததையும் அவரது மகன் கண்டுள்ளார். அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அருகிலிருந்த கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு எவ்வித சிகிச்சையும் அளிக்க மறுக்கவே, அருகிலிருந்த தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், ”அவர் இறந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது, எந்த முயற்சியும் எடுக்க இயலாது” என்று கூறி, அவரது பிரேதத்தை அன்று இரவு தென்காசி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்து இருக்கிறார்கள். நேற்று காலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் விசாரணையில் 18 காயங்கள் உடம்பில் இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று மாலை 5 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யவேண்டாம் என கேட்டு கொண்ட போதும், இது ஸ்பெஷல் ஆர்டர் என கூறி, குடும்ப உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இத்தொடர் சம்பவங்கள் முழுக்க முழுக்க வனக்காவலர்களுடைய தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களுடைய அலுவலகத்திலேயே அவர் மரணம் எய்தியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

எனவே, இது ஒரு வனக்காவல் அலுவலக கொலை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. மூன்று நாட்கள் ஆகியும் கூட இன்னும் வனக்காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமலும், அவர்கள் கைது செய்யப்படாமலும் இருப்பது அவர்களை பாதுகாப்பதற்கு ஒப்பானதாகும். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. 
எனவே, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்ததை போல, இவ்வழக்கையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவும், மறு பிரேத பரிசோதனை செய்யவும், அவர்களுடைய குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பு அளிக்குமாறும்  தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *