கர்ணன் திரைபடத்தில் தனுஷ் யானைமேல் அம்பாரம் போவது குறித்து நிறைய விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.
அதில் ஒன்றை அனைவரும் கவனிக்க வேண்டும். கர்ணன் மீன் வெட்டும் விழாவில் வெற்றி பெற்று யானை மீது அம்பாரம் செல்வது குறித்து.
கர்ணன் ஒரு குதிரையிலோ அல்லது ஒரு கழுதை மீதோ ஏறிச் சென்றிருந்தால், அதுபற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். (குதிரையும் கழுதையும் எதிரெதிர் நிலைகள்)ஏனென்றால் குதிரைமீது படைவீரர்கள் ,சேனாதிபதிகள் போன்றோர்கள் பயணம் செய்யலாம். ஆனால் ஓர் அரசன் என்பவன் தேர் மீதோ அல்லது யானை மீதோதான் பயணம் செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு யானை என்பது அரச குடும்பத்தின் அடையாளம். எனவே கர்ணன் மகாபாரதத்தில் அரசனாக முடியாமல் போனதற்காக, இந்த திரைப்படத்தில் கர்ணன் வென்றதும் யானை மீது அம்பாரம் செல்வது ஒரு குறியீடுதான்.
மகாபாரத கதை உணர்த்தும் பொருள்
மகாபாரதத்தில் உண்மையான குரு வம்சத்து சக்கரவர்த்தி ஆகவேண்டிய கர்ணன் விதிவசத்தால் குரு வம்சத்து துரியோதனனுக்கு அடிமையாக சேவகம் செய்ய வேண்டிய சூழலில் வைத்திருப்பார்கள். பஞ்சபாண்டவர்கள் குந்திக்கு எப்படி பிறந்தார்களோ அதேபோன்றுதான் குந்திக்கு மூத்த மகனாக கர்ணன் பிறக்கிறான். ஆனால் அப்போது குந்திக்கு திருமணமாகாத காரணத்தினால் கர்ணனை ஆற்றில் அனுப்பிவிடுகிறார். ஆற்றில் வரும் பெட்டகத்தை எடுத்து ஒரு தேரோட்டி வளர்க்கிறான். தேரோட்டி வளர்ப்பதனால் கர்ணன் தேரோட்டி மகனாகவே பார்க்க படுகின்றான்.
கர்ணனை யானை மீது அமரச்செய்து ஊர்வலம்
வில்வித்தை கற்க வேண்டி கர்ணன் துரோணாச்சாரியாரை அணுகும்போது, துரோணர் கர்ணனை நீ தேரோட்டி மகன் என்பதால் உனக்கு பயிற்சி அளிக்கலாகாது என்று அனுப்பி விடுவார். பிறகு கர்ணன் பரசுராம முனிவரிடம் சென்று அந்தணர் வேடம் தரித்து பரசுராம முனிவரிடம் வில்வித்தை கற்றுத் தேருவான். இறுதியில் கர்ணன் அந்தணன் இல்லை என தெரிய வந்ததும் பரசுராமர் கர்ணனிடம் என்னிடம் கற்ற கலைகள் அனைத்தும் உனக்கு முக்கியமான தருணத்தில் மறந்து விடும் என்று சாபமிடுகிறார்.இவ்வாறாக தகுதி இருந்தும் கர்ணன் சபிக்கப்பட்டவன் ஆவான். அந்த சபிக்கப்பட்ட நிலை நீண்டு கொண்டே வரக்கூடாது என்றே மாரிசெல்வராஜ் கர்ணனை யானை மீது அமரச்செய்து ஊர்வலம் விடுகின்றான்.
கர்ணன் கேட்கும் உரிமை இது தான்
தேவேந்திர குல சமுதாய மக்களின் தற்போதைய நிலையை கர்ணன் கதாபாத்திரம் உணர்த்துகிறது. ஆம் தமிழ்நாட்டில் பழநி முருகன் கோயில், கோவை பட்டீஸ்வரர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ( தமிழக அரசின் சின்னம்) என 400ற்கும் மேற்பட்ட கோவில்களில் இன்றுவரை முதல் மரியாதை, பரிவட்டம் மற்றும் தேர் இழுக்கும் உரிமை உடைய மூத்த வேளாண் குடி மக்களான தேவேந்திர குல வேளாளர்கள் இன்று ஊடகங்களிலும், ஆட்சி அதிகாரத்தாலும் ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட, என அழைக்கப்படும் நிலையை மாற்றவே தற்கால கர்ணன் போராடுகிறான்.
கர்ணன் உண்மையில் குரு வம்சத்து மூத்த மகன் ( குரு வம்சத்து மூத்தமகன் என்பதில் சிலருக்கு ஐயப்பாடு தோன்றலாம். குந்தி தேவிக்கு எப்படி தருமன் முதலான ஐந்து மகன்கள் பிறக்கின்றனரோ அதேபோன்றுதான் கர்ணனும் பிறக்கின்றான். பாண்டவர்கள் ஐவரும் கௌரவர்கள் 101 பேரும் பாண்டுவிற்கும் திருதராஷ்டிரர் கும் பிறக்கவில்லை .மாறாக குந்திக்கும் காந்தாரிக்கும் கிடைக்கப் பெற்ற வரத்தினால் தான் அவர்கள் பிறக்கிறார்கள் . பாண்டுவிற்கு ஒரு பெண்ணை தீண்டினால் உடனே மரணம் வந்துவிடும் என்கிற சாபம் வேறு உண்டு.அதுபோலவே இதையெல்லாம் தாண்டி அந்த காலத்தில் தாய்வழி மரபு இருந்ததை அனைவரும் அறியலாம் .தாய்வழி மரபு என்பது அந்த தாயானவள் பலதார மணங்களை புரியலாம் .இந்தக் கதையில் கூட பாஞ்சாலிக்கு ஐந்து கணவர் என்பது ஒரு எடுத்துக்காட்டு தான்). எனவே கர்ணன் அங்கத தேசத்திற்கு மட்டுமல்லாது அவன் குரு தேசத்திற்கும் அரசன் ,பேரரசன், சக்கரவர்த்தி என்ற பொருளிலேயே யானை மீது அம்பாரி என்று மாரி செல்வராஜ் திரையில் காட்டியிருப்பார். இதில் உங்களுக்கு என்ன வந்தது? கர்ணன் யானையில் போனா என்ன? கழுதையில் போனா என்ன?
உங்களுக்கு கர்ணன் படம் பிடிக்காமல் போகலாம். அதுபோல எங்களுக்கும் பிடிக்காத படங்கள் எல்லாம் நிறைய வந்துட்டு போயிட்டு தான் இருக்கு. நாங்க எந்த படத்தையும் திட்டவில்லை. அதுபோல கடந்து செல்ல முயற்சியுங்கள். உங்கள் விருப்பம் போல் படம் எடுக்க வேண்டுமெனில் நீங்களே தயாரிப்பாளராகி நீங்களே கதையை உருவாக்கி திரைப்படமாக எடுத்து விடுங்கள் பார்த்து நாங்களும் மகிழ்வோம் நீங்களும் மகிழலாம்.
படத்தின் தலைப்பானது கர்ணன் என்பதை மனதில் இருத்தி படம் பார்த்தோமானால் எளிதில் விளங்கும். திரையில் காட்டப்படும் காட்சிகளுக்காக மட்டுமே கதாநாயகன் பெயர் வைத்திருக்க வேண்டுமானால் அதற்கு கர்ணன் தவிர்த்து பல லட்சோபலட்ச பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.
நன்றி
முகநூல் வாசகர்