இயக்குனர் ராமின் உதவி இயக்குனராகதான் மாரி செல்வராஜ் எனக்கு அறிமுகம்.
தாமிரபரணி நதியில் கொல்லப்படாமல் மாரி தப்பிப்பிழைத்த கதையை படித்தப்பிறகு மாரி செல்வராஜ் ( Mari Selvaraj ) உறுதியாக வெற்றி பெறுவார் என்று நம்பினேன்.
நேற்று பரியேறும் பெருமாள் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்து முடித்ததும்.. மாரி இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார் என்பது உறுதியானது. ஏனெனில் படம் முழுக்க அத்தனை உணர்வுகளும் அரசியலும் காட்சி மொழியும் நிறைந்திருந்தது.
தனித்துவமான இயக்குனர் ராமின் பட்டறையில் இருந்து வெளி வந்திருக்கும் மாரி தன் குருவின் பெயரை காப்பாற்றியிருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்குள் சலசலப்பை உண்டு பண்ண நுழைந்திருக்கும் கதாநாயகன் ( முற்போக்கு போராளிகள் உட்பட பலருக்கும் வில்லன்.. 😉 )..
டாட்டா சுமோக்கள் பறக்காத.. நெல்லை மக்களின் எதார்த்தமான வாழ்வியலை பதிவு செய்திருக்கும் முதல் மக்களின் சினிமா பரியேறும் பெருமாள்.
பலரும் பட விமர்சனம் எழுதுவார்கள். நாம் படம் பேசும் அரசியலை பார்ப்போம்.
கருப்பி என்ற நாய் கொல்லப்படும் காட்சி கொடுக்கும் அதிர்ச்சியில் இருந்து ஆரம்பிக்கும் கதை, நாயகன் கதிர் நெல்லை சட்டக்கல்லூரிக்குள் நுழைந்ததும் விறுவிறுப்பாகிறது.
சட்டக்கல்லூரிக்குள் நுழைந்த முதல்நாள் பிரின்ஸிபலிடம், “படிச்சு டாக்டர் ஆவேன்” என்று கதிர் சொல்வதில் ஆரம்பிக்கிறது அரசியல். இப்படி படம் நெடுக அப்ளாஸ் அள்ளும் வசனங்கள் பல இருக்கின்றன.
நம் கல்வி கூடங்கள் எப்படி சாதியால் இயக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் மாரி. என்னதான் நாம் சாதி மறுப்பு பேசினாலும் கள நிலவரம் வேறு.
கல்லூரியில் வேறு சமூகத்தைச்சேர்ந்த மாணவியாக வரும் ஜோ, பரியனுடன் நட்பாக பழகுகிறார். வெகுளித்தனமாக வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் பரியன் குறித்து பேசுகிறார்.
இதனால் பரியன் பல பின் விளைவுகளை சந்திக்கிறார். அதில் கவுசல்யா சங்கர் முகம் நம் மனதிற்குள் வருகிறது. இறுதியில் பரியன் கதை என்னவானது என்பதை திரையில் காண்க.
பரியனாக வரும் கதிர், ஜோ ஆனந்தி, சாதிக்காக கொலை செய்வதையே கடமையாக வைத்திருக்கும்
பெரியவர் வெங்கடேஷ் , பரியன் அப்பாவாக வரும்
நடன கலைஞர் தங்கராஜ் , ஜோவின் அப்பா மாரிமுத்து, மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் புளியங்குளம் ஊர்மக்கள் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
யோகி பாபு காட்டில் மழைதான். இந்த படத்தின் இறுக்கம் யோகி வரும் காட்சியில் எல்லாம் தளர்ந்து புன்னகைக்க வைக்கிறது. ஒளிப்பதிவு இசை எடிட்டிங் அனைத்தும் சிறப்பு.
உண்மையை சொல்ல வேண்டுமானால் பாடல் வெளியானபோது என்னை ஈர்க்க வில்லை. ஆனால் திரையில் படக்காட்சிகளுக்கு நடுவே பார்க்கும்போது அவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. வாழ்த்துகள் சந்தோஷ் நாராயணன்.
அப்புறம் அந்த கருப்பியை சொல்லாவிட்டால் இந்த பதிவு நிறைவடையாது. அவ்வளவு அழகு மட்டுமல்ல.. இறுதி காட்சியில் வந்து தன் நாக்கால் படத்தின் போக்கையே மாற்றுகிறாள். அதுவும் அந்த தண்டவாள காட்சிகள் செம குறியீடு .
படத்தில் மாரியின் புத்திசாலித்தனமாக நான் ரொம்ப ரசித்தது.. ஒரு இடத்தில் கூட பரியன் அந்த பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லவே இல்லை.
படம் முழுக்க.. “டேய் வீரா.. எங்கடா போன.. ”என்று முத்தழகு போல் நம்மை மாரி கதற விடுவாரோ என்று பதட்டமாகதான் படம் பார்த்தேன்..
ஆனால் மாரி அந்த அவநம்பிக்கையை போக்கி தன் திரைமொழியால் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்..
இன்று அந்த நம்பிக்கைதான் அவசியமானது.
இறுதியாக..
சாதி ஒழிப்பு என்பது சாதியால் ஒடுக்குமுறைக்குள்ளாகுபவர்களின் எழுச்சியினால் வர வேண்டியதை விட..
சாதியால் ஒடுக்குபவர்களின் குற்ற உணர்ச்சியால் வர வேண்டும் என்பதே முக்கியம்..
அதை இறுதி காட்சியில் வரும் மாரியின் இரண்டு கண்ணாடி டீ கிளாஸ்கள் உண்டு பண்ணியிருக்கின்றன..
சந்தேகமே வேண்டாம்.. உங்கள் பெருமாள் பரியேறி பறப்பார்.
இயக்குனர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள்..!