பரமக்குடி அருகேயுள்ள செல்லூர் 1924 அக்டோபர் 9-ல் பெரியவர் வேதநாயகம் வாத்தியாருக்கும், ஞானசவுந்தரி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார், தொடக்கக்கல்வியை டி.இ.எல்.சி. பள்ளியிலும், உயர் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார். மரணத்தின் போது அவர் கிறித்துவர் இல்லை என சொல்லிக் கொண்டாலும், குழந்தைப்பருவம் முதல் தொடங்கிய இளமைக் கால அனுபவங்கள் அனைத்தும் ஒரு சாராசரி கிறித்துவருக்கே உரிய திருச்சபை அடையாளங்களோடு எழுச்சி பெற்றன. படிக்கும்போது தனது 18-ஆவது வயதில் இந்த நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (1942) பங்கேற்று, முன்று மாதங்கள் சிறை தமண்டனையை அனுபவித்தார், சிறை வாழ்க்கைக்குப் பிறகு பள்ளியில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு மீண்டும் அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டு 1945-ல் இராணுவத்திற்குப் புறப்பட்டார்.
பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் அய்ந்து ஆண்டுகளும் பணியாற்றினார். 1857-ல் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற முதல் சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிறித்துவர்கள் எழுப்பிய குரல் எவ்வாறு புலப்படாமல் போயிற்றோ, அது போல 1947-ல் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற சுதந்திரப்போரில் காலனிய கும்பலுக்கு எதிராகப் போராடிய தலித்துகளின் வரலாறும், கிறித்துவர்களின் பங்கேற்பும் ஒரு சேரத் தவிர்க்கப்பட்டுள்ளன, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் இராணுவத்தின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்ககது. யாரெல்லாம் சேரியில் இருந்து இராணுவத்திற்குச் சென்றார்களோ, அவர்கள் மீணடும் சேரிக்குள் சுய மரியாதை உணர்வுடன் திரும்புவதற்கு இராணுவ அனுபவமும், அதன் மிலிட்டிரி உடையும், துப்பாக்கியும், என்பீல்டு போன்ற மோட்டார் சைக்கிளும் மிக முக்கியமான பாதுகாப்பை வழங்கியது. புரட்சியாளர் அம்பேத்கர் தொடங்கி வைத்த ஷெட்யூல்டு இனப் பேரவையை தென் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய தென் மணட்லப் பொறுப்பாளர், மேலக்கால் வீரபத்திரன் (முகமது பிலால்) சோழவந்தான் பகுதியில் ஒற்றை இராணுவமாக நின்று எதிர் வினையாற்ற முடிந்ததற்கு காரணம் இராணுவ அனுபவம்தான்.
அவ்வாறான அனுபவத்தைக் கொண்டு 1952-ல் தனது அவில்தார் பணியைத் துறந்த இமானுவேல் சேகரன் ஊர் திரும்பினார். அப்போது நடந்து கொண்டிருந்த பொதுத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் கவனிக்கத்தக்கது. இந்த நாட்டின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்வகள் எல்லாம் களத்தில் அன்றைய இளம் வேட்பாளர்கள். காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தியவர் இம்மானுவேல் சேகரன். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என சாக்கு சொல்லி, அதனை ஈடுகட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளை மூடுகிறோம் என இராஜாஜி எடுத்த முடிவை மிக வன்மையாகக் கண்டித்தார். கிறித்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான பள்ளிகளுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் போர்க் கொடி பிடித்த போது ஒடுக்கப்பட்ட சமுகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள் என பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்தார். கிறித்துவ திருச்சபைகளுக்கு சொந்தமான பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றளவும் இயங்க முடிகிறதென்றால் அன்றைக்கு மாவீரன் முழக்கிய போர் முரசு என்பதே.1952-ல் நிகழ்ந்த பொதுத்தேர்தல் இம்மானுவேல் சேகரனை கிறித்துவ வட்டாரத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து மாபெரும் சமுகப் போராளியாக்கியது. அந்த தேர்தலில் உ. முத்துராமலிங்கம் என்பவரை எதிர்த்து களத்தில் போட்டியிட்டார்.
இச்செய்தி அப்பகுதிகளில் காட்டுத்தீ போல பரவியது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமையை மீட்க அய்ந்து ஆண்டுகள் போராடினார். அது மட்டுமல்ல இரண்டொரு மாவட்டங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய உ. முத்துராமலிங்கம் என்பவரின் சாதியச் சேட்டைகளை சமூகத்திற்குப பட்டியலிட்டுக் காட்டினார். இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல பாதிப்புக்குள்ளான பிற்படுத்தப்பட்டவர்களையும் போராட்டக்களத்தை நோக்கி அணி திரள அழைப்பு விடுத்தார். உ. முத்துராமலிங்கம் என்பவரின் சொந்த சமுகத்தைச் சேர்ந்தவர்களே இம்மானுவேல் சேகரனின் விடுதலைக்கான போர்க்குணத்தை வரவேற்றனர். இன்றைய தினகரன் நாளிதழை தோற்றுவித்த அதன் ஆசிரியரான தினகரன், இம்மானுவேல் சேகரனுக்கு ஆதரவாகவும், உ. முத்துராமலிங்கத்துக்கு எதிராகவும் தனது தினகரன் பத்திரிக்கையில் எழுதினார் என்பதற்காக தன் சொந்த சாதிய சகாக்களால் படுகொலையும் செய்யப்பட்டார். இவர் தொடங்கி வைத்தப் போராட்டம் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகம் கடந்து ஓயாத அலைகளாகப் பேரோசை எழுப்பியது. 1957-ல் பத்ரகாளிக்குப் பலி கொடுப்பதற்காக காடமங்குளம் கிராமத்தில் இருந்து ஒன்பது தலித்துகளை உ. முத்துராமலிங்கத்தின் சகாக்கள் தூக்கிப்போனார்கள் என்ற நிகழ்வும், அதன் மீதான வழக்கு விசாரணையும் அன்றைய அரசியலில் சலசலப்பை உருவாக்கியது. இந்த பிரச்சனையை இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் வரைக்கும் இம்மானுவேல் சேகரன் கொண்டு சென்றார். மறுநாள் பண்ணந்தலை கிராமத்தில் தேவேந்திரர்கள் ஒன்று கூடி உ. முத்துராமலிங்கத்தை பஞ்சாயத்து வரை இழுத்துச் சென்று மாபெரும் குற்றவாளியாக நிற்க வைத்து, கையெழுத்திட வைத்த நிகழ்வுதான் இமானுவேல் சேகரன் நேரிடையாகப் பங்கேற்ற கடைசிப் போராட்டம். அதன் பின்னர் எல்லா வன்கொடுமைகளையும் இம்மானுவேல் சேகரன் எதிர்கொண்டார். ஒரு குற்றமும் அறியாத அவரை சமுக விரோதியாகப் பாவித்து அவரை கொல்ல உ. முத்துராமலிங்கத்தின் ஆதிக்கச் சமுகங்களால் சதித்திட்டம் தீட்டப்பட்டது. சமாதானக் கூட்டம் நடந்த மறுநாள், அதாவது 11.09.1957 அன்று மாலை எமனேஸ்வரம் கிராமத்தில் நடந்த பாரதி விழாவிற்குச் சென்று சிறப்புரையாற்றி விட்டு இரவு 8.30 மணியளவில் பரமக்குடியில் இருந்து தனது இல்லத்திற்கு திரும்பினார். அவரது வீடு பரமக்குடி வளைவு அருகில், காந்தி சிலை வீதியில் மேற்புறத்தில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது. இரவு உணவை முடித்து விட்டு வளைவுக்கு கிழக்கே 50 அடி தொலைவில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்குப் போன இம்மானுவேல் சேகரன் எதிர்பாராத நிலையில் கொடிய ஆயுதங்களால் பதுங்கி இருந்த ஆதிக்கச் சாதி ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலையுண்ட செய்தி தமிழத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீடுகளும், கடைகளும் மூடப்பட்டு நடமாட்டம் அருகிக் காணப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஆயுதமேந்திய காவல் துறையினரும். இராணுவத்தினரும் மாவட்டம் முழுக்கக் குவிக்கப்பட்டனர். அன்று குவிக்கப்பட்ட ஆதிக்க சமுகங்களுக்கான காவல் பாதுகாப்பு இன்றுவரை விலக்கிக் கொள்ளப்படவில்லை. தங்கள் தலைவரை, வழிகாட்டியை, வீரத்தளபதியை இழந்து தவித்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஆதிக்கச் சமுகங்களுகும் இடையே மோதல் வெடித்தது. தாக்குதல்கள் தொடர்ந்தன. அது முதுகுளத்தூர் கலவரமாக வெடிக்கத் தொடங்கியது.