தமிழக எல்லையில் தோன்றி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதி ஒன்று தமிழகத்தில் உள்ளது என்றால் அது தாமிரபரணி என்று அழைக்கப்படக்கூடிய பொருநை நதியே ஆகும்.
இந்த தாமிரபரணியானது திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் துவங்கி பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களை கடந்து பாபநாசம் சிவன் தலத்தை வந்தடைகிறது. அங்கிருந்து 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல், சங்குமுகம் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது.
இந்த தாமிரபரணியானது காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, சிற்றாறு, மணிமுத்தாறு பச்சையாரு போன்ற கிளை நதிகளையும் தன்னகத்தே உள்ளடக்கி உள்ளது.
காடுகளில் நாடோடிகளாய் சுற்றித்திரிந்த மனிதர்களிடையே நாகரீகம் தோன்றியதே நதிக்கரை ஓரங்களில் தான் என்று வரலாற்று முடிவுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட வரலாறு தென் தமிழக வற்றாத ஜீவநதியான நம் தாமிரபரணிக்கும் உண்டு.
இன்றளவும் தாமிரபரணி நதியின் இரு மருங்கிலும் இருபோகம், முப்போகம் என நெல் விளையும் பூமியாகவும், வாழைத் தோட்டங்கள் நிறைந்த பூமியாகவும் காட்சியளிக்கிறது.
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்கிற தொல்காப்பிய நூலின் கூற்றுப்படி தாமிரபரணி நதி பாயும் கரையின் இரு புறங்களிலும் மருத நில மக்களாகிய தேவேந்திரகுல வேளாளர்களே அடர்த்தியாய் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆதி காலத்தில் மனித இனம் காடுகளில் சுற்றித்திரிந்து கிடைக்கும் உணவை உட்கொண்டு நாடோடிகளாகவே வாழ்ந்து வந்தார்கள், அவர்களில் ஒரு பிரிவினர் மருத நிலத்தில் குடியேறி நிலத்தைப் பண்படுத்தி விளைச்சலுக்கு ஏற்ற வகையில் மாற்றி தனக்கான உணவு தேவையை உற்பத்தி செய்ய தொடங்கினார்கள். பின்னர் அதில் வளர்ச்சி கண்டு தன் தேவையோடு சேர்த்து தன்னை சார்ந்தவர்களுக்கும் சேர்த்து உணவு தானியங்களை உற்பத்தி செய்ய தொடங்கியதோடு மட்டுமல்லாமல் உணவு தானியம் உற்பத்தியாகும் இடங்களிலேயே குடில்களை அமைத்து குடும்பமாக வாழத்தொடங்கினர். இப்படி தனக்கென ஒரு பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உருவாக்கிக் கொண்டு குடும்பமாக வாழ்ந்ததால் அம்மக்கள் குடும்பர்கள் என அழைக்கப்பட்டனர். குடும்பர்கள் தங்களுக்கு வழிகாட்டியாக ஒரு தலைவரை தேர்ந்தெடுத்தனர் அவர் ஊர்க்குடும்பர் என்றும் அழைக்கப்பட்டார். பிற்காலங்களில் இந்த நடைமுறையே நகரங்கள் தோன்றவும், தலைமையை தேர்ந்தெடுக்கும் அரசாங்க நடைமுறைகள் உருவாகவும் அடித்தளமாய் அமைந்தது.
இந்தக் குடும்பர்கள் பள்ளமான நிலங்களில் உழவுத் தொழில் செய்ததால் பள்ளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தப் பள்ளர்கள் தான் நெல் வகைகளை கண்டுபிடித்து உழவுத் தொழிலை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் என்பதற்கான சான்றுகள் தொல்காப்பியத்திலும், பள்ளு இலக்கியங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.
இதனை அடிப்படையாய் கொண்டே உலகிற்கே உணவளித்த சமூகம் பள்ளர்களாகிய தேவேந்திர குல வேளாளர்கள் தான் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதும் உண்டு.
இதன் ஒரு பகுதியாகவே தாமிரபரணி நதிமூலம் பாசன வசதி பெறும் இடங்களுக்கு தலைமையிடமாக “மருத வேலி” என்கிற இடம் உருவாக்கப்பட்டு, அதுவே திரிந்து “மருதநெல்வேலி “ஆகி இன்று “திருநெல்வேலி” என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சான்றாகவே தன் நிலத்தில் விளையும் முதல் நெல்மணிகளை நெல்லையப்பர் கோவிலுக்கு தானமாக கொடுப்பதும், முதல் மரியாதை பெறுவதும் ஆகும். தேவேந்திரர்கள் கொண்டால்தான் நெல்லையப்பர் கோவில் தேர் ஓடும் என்கிற வரலாற்று நிகழ்வுகளுமே வேளாண்மையோடு தொடர்புடைய சான்றாகும்.
தேவேந்திர குல வேளாளர்கள் தான் நாகரீகத்தின் தோற்றுவாய் என்பதை பறைசாற்றும் விதமாகவே இன்று அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களான கீழடி, கொந்தகை, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற ஊர்கள் இன்றளவும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வசிக்கும் ஊர்களாகவே இருக்கின்றன.
இதில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராட்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் ஏரக்குறைய 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது இதே தாமிரபரணி நதிக்கரையில் தான் என்பது தனிச்சிறப்பு. இதுவே நதிக்கும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் உள்ள தொடர்பின் ஒரு சான்றாகவே பார்க்கப்படுகிறது.
ஆதிநித்த குடும்பனின் வழிகாட்டுதலில் குடும்பர்கள் இதே இடத்தில் குடும்பமாக வசித்து உழவுத் தொழில் செய்து வந்துள்ளனர். தங்களது ஊர்க் குடும்பனை பெருமைப்படுத்தும் விதமாக தங்கள் ஊருக்கு “ஆதிநித்த நல்லூர்” என்று பெயர் சூட்டியிருந்தனர். பிற்காலத்தில் இந்த இடமே ஆதிச்சநல்லூர் என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆதிச்சநல்லூரை ஒட்டி யுள்ள புளியங்குளம் பரம்பு என்னும் இடத்தில் தான் தற்போது அகழாய்வு நடைபெறுகிறது, இந்த புளியங்குளம் ஊரானது முழுக்க முழுக்க தேவேந்திரகுல வேளாளர்கள் மட்டுமே விவசாயம் செய்து செல்வ செழிப்போடு வாழ்ந்து வரும் ஊராகும். இந்த புளியங்குளம் பரம்பே தாமிரபரணி நதியின் தென்பகுதி கரையாகவும் உள்ளது.
தாமிரபரணி நதியின் தென்கரையான புளியங்குளம் பரம்பில் அகழாய்வு நடக்கும் இடங்களுக்கு நடுவே “பாண்டியராஜா கோவில்”என்ற கோவில் ஒன்று உள்ளது. இது முற்றிலும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு மட்டுமே பாத்தியப்பட்டது, இந்த கோவிலானது புளியங்குளத்தில் வாழ்ந்து மறைந்த பாண்டிய மன்னனின் நினைவாக கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் மகாபாரத கதையில் வருவது போன்றே மகாபாரத யுத்தத்தோடு தொடர்புடைய வகையில் புளியங்குளம் மக்களால் ஆண்டுதோறும் கோவில் கொடையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் மகாபாரத யுத்தமே இன்று அகழாய்வு நடக்கும் இந்த பரம்பில்தான் நடைபெற்றதாகவும் ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையிலேயே வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணம கதையில் கிட்கிந்தா காண்டத்தில் தாமிரபரணியை தொடர்பு படுத்தி கூறியுள்ளதையும் ஒரு சான்றாகவே கருதமுடிகிறது. இந்த பாண்டியராஜா கோவிலானது பள்ளர்களாகிய தேவேந்திரகுல வேளாளர்கள்தான் பாண்டியர்கள் என்பதற்கான அடையாளச் சான்றாகவும் இன்றளவும் விளங்கி வருகிறது. இத்தனை சான்றுகள் கிடைத்தும் ஆராய்ச்சிகள் மட்டும் தொடர்கிறதே தவிர, இந்த வரலாறுகள் எந்த மக்களுக்கானது என்பதை ஆண்ட அரசுகள் எவரும் வெளிப்படுத்தாமல் மௌனமாகவே இருந்துவிட்டார்கள்.
தாமிரபரணி நதியின் தோற்றுவாயிலிருந்து பழங்கால அரசர்களால் ஆறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டு பாசன வசதி பெற்று வந்துள்ளது. இதில் ஏழாவதாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு இன்றளவும் பிரசித்தி பெற்றதாகும், இந்த அணைக்கட்டில் இருந்து வடகால் மதகு, தென்கால் மதகு என இரு கால்வாய்கள் பாசனத்திற்காக பிரித்து விடப்படுகின்றன.
இதில் வடகால் மதகு மூலம் பாசன வசதி பெரும் ஊர்களில் ஒன்றுதான் சிவகளை என்கிற ஊர் ஆகும். இந்த ஊரானது ஆதிச்சநல்லூருக்கும், துறைமுக நகரமாக விளங்கிய கொற்கைக்கும் நடுவே அமைந்துள்ளது. இதுவும் தேவேந்திரகுல வேளாளர்களே அடர்த்தியாக வாழும் ஊராகும்.
இந்த சிவகளையில்தான் சமீப காலமாக அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இங்கேயும் பரம்பு பகுதியிலேயே அகழ்வாராய்ச்சி நடைபெறுவது புளியங்குளம் பரம்பிற்கும், சிவகளை பரம்பிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதேயே வெளிப்படுத்துகிறது. இங்கும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் உட்பட பல்வேறு வரலாற்று ஆவண சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு முதுமக்கள் தாழியில் இருந்து பல்வேறு தரப்பட்ட நெல் மணிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது என்கிற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையிலேயே இன்று பலவிதப்பட்ட நெல்மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுவே நெல்லுக்கும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் உள்ள தொடர்பின் மற்றும் ஒரு சான்றாகும்.
இந்த சிவகளையில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் கொடை விழாவிற்கு தீர்த்தவாரி எடுத்து வர தாமிரபரணி நதியானது கடலோடு சங்கமிக்கும் பழையகாயல் சங்கு முகத்திற்கு செல்வதையே இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதுவும் தேவேந்திரர்களுக்கும் தாமிரபரணிக்கும் இடையேயான பிணைப்பின் மற்றும் ஒரு சான்றாகும்.
அகழாய்வு நடக்கும் இடமானது குளம் கரையின் ஒருபுறம் என்றால் கரையின் மறுபுறம் அமைந்துள்ள ஊர்தான் பராக்கிரம பாண்டியபுரம் என்பதாகும். இந்த ஊரானது பராக்கிரம பாண்டிய மன்னன் பிறந்த ஊராக கருதப்படுகிறது இந்த ஊரும் முழுக்க முழுக்க தேவேந்திரகுல வேளாளர்கள் மட்டுமே வாழும் ஊராகும் . சமீபத்தில் கூட பராக்கிரமா பாண்டிய புரத்தின் வயல் வலிகளுக்கு நடுவே அமைந்துள்ள திட்டுகளில் அகழாய்வு நடத்தப்பட்டு பல்வேறு வகையான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தென்கால் மதகு பாசன கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் முக்கியமானது தான் கடலில் பாதி கடம்பா என்று அழைக்கப்படக்கூடிய “கடம்பாகுளம்” ஆகும் இந்த குளத்தை சுற்றிலும் தேவேந்திர குல வேளாளர்களே பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கடம்பா குளம் மூலம் பாசன வசதி பெறும் தென்திருப்பேரை என்கிற ஊரில் தான் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும், வேளாண்மைக்கும் உள்ள தொடர்பை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் இங்குள்ள மக்களால் “பொன் ஏர் பூட்டும் திருவிழா” வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதுண்டு.
மேலும் தேவேந்திரகுல வேளாளர்கள் குலதெய்வமாக வழிபடும் சாஸ்தா தெய்வங்களும், நவ திருப்பதி ஸ்தலங்களும் தாமிரபரணி நதிக்கரையை ஒட்டியே அமைந்துள்ளன. இதோடு மட்டுமல்லாமல் ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த ஆழ்வார் திருநகரி என்கிற ஊரும் தாமிரபரணி கரையில் தான் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் நாம் சுட்டிக்காட்டியுள்ளது தாமிரபரணி நதியோடு தொடர்புடைய தேவேந்திரர்களின் சிறப்பு பற்றி மட்டுமே, மற்றபடி தமிழக முழுவதும் தேவேந்திர குல வேளாளர்கள் வேளாண்மையோடு தொடர்புடைய தனித் தன்மையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை எக்காரணம் கொண்டும் மறுப்பதற்கு இல்லை!
கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாருமே தேவேந்திரர்களாய் தோன்றி நாற்று நடுதல், மதுரை மீனாட்சி தாயார் தேவேந்திரர்கள் வயல்வெளிக்கு வந்து நாற்று நடுதல் போன்ற தெய்வங்களோடு தொடர்புடைய வரலாற்று சான்றுகளும் நமக்கு உண்டு.
இப்படி பல்வேறு தரவுகள் நமது பாரம்பரிய தொழிலான வேளாண்மேயோடு தொடர்புடையதாக உள்ளதால் தான், நாம் தேவேந்திரன் வம்சாவளியினர் என்பதற்காக தேவேந்திரர் பட்டத்தையும்,வேளாண்மைக்கு உரியவர்கள் என்பதால் வேளாளர் என்கிற பட்டத்தையும் சேர்த்து, பல்வேறு தரப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே போராடி இன்று “தேவேந்திரகுல வேளாளர்” என்கிற பெயரை சட்ட ரீதியாக பெற்றுள்ளோம்.
நாம் போராடிப் பெற்ற வேளாளர் பட்டம் காக்கப்பட வேண்டும் எனில் வேளாண்மை காக்கப்பட வேண்டும், வேளாண்மை காக்கப்பட வேண்டும் எனில் நதிகளும் நீர் நிலைகளும் காக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமாகும்!
வரும் காலங்களில் யாராவது தேவேந்திரர்களுக்கும் வேளாண்மைக்கும் என்ன சம்பந்தம்? என்று நம்மைப் பார்த்து கேட்டுவிடக்கூடாது அல்லவா? அதனால் தான் நதியை பாதுகாப்பதும் நம்குலத் தொழிலான வேளாண்மையை பாதுகாப்பதும் நமது தலையாய கடமையாகிறது.
மனிதகுலம் தோன்றியதே எங்கள் ஆதிச்சநல்லூரில் தான் என்று நாம் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில், நமது நாகரிகம் உருவாக காரணமாக அமைந்த நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதியானது இன்று அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!
சில நாட்களுக்கு முன்பு ஒரு சில தனியார் அமைப்புகளும், பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்களும் சேர்ந்து நடத்திய கள ஆய்வில் தாமிரபரணி நதி நீரின் தன்மையானது குடிக்கும் தன்மையை இழந்து, தற்போது குளிக்கும் தன்மையும் இழந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இச்செய்தியானது தாமிரபரணி நீரை குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தும் ஐந்து மாவட்ட மக்களுக்கும், பாசனத்திற்காக பயன்படுத்தும் இரண்டு மாவட்ட மக்களுக்கும் பேரிடியாகவே அமைந்துள்ளது. எதை நாம் வற்றாத ஜீவநதி என்று அழைத்தோமோ அந்த தாமிரபரணியானது இன்று தனது ஜீவனை இழந்து நிற்கிறது. தற்போது கழிவுகள் கலந்து செல்லும் நீரில் சிறியவர்கள் குளித்தாலே ஒரே வாரத்தில் தலைமுடிகள் நரைத்துவிடும் அளவிற்கு மாசடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிக்கவே தகுதியை இழந்து விட்டது என்றால் எப்படி இந்த நீரை குடிப்பது? இந்த நீரில் எப்படி வேளாண்மை செய்வது? நதியை மீட்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.
பொதிகை மலையில் உள்ள இயற்கை மூலிகைகள் கலந்து வருவதால் தாமிரபரணி நீரை பருகினாலே நோய்கள் தீரும், ஆயுட்காலம் கூடும் என்று சொல்லப்பட்ட காலமும் உண்டு. திருநெல்வேலி அல்வா சுவையாக இருக்க தாமிரபரணி தண்ணீரே காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.
இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட தாமிரபரணி நதிநீர் கெட்டுப் போக முதல் முக்கிய காரணமாக இருப்பது மாநகராட்சி கழிவுகள் அனைத்தும் தாமிரபரணியோடு கலப்பதுதான். இதோடு மட்டுமல்லாமல் மருத்துவ கழிவுகள், தோல் தொழிற்சாலை கழிவுகள், வரைமுறை இல்லாமல் கனிம வளங்களை சூறையாடும் செங்கற் சூலை கழிவுகள், கால்நடை கழிவுகள், மனிதக் கழிவுகள் என கழிவுகளின் கூடாரமாகவே மாறிவிட்டது நம் தாமிரபரணி. இதுபோன்று நதி பாயும் 128 கிலோமீட்டர் தூரத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுகள் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதே நிலை நீடித்தால் தாமிரபரணி நதியானது மற்றும் ஒரு கூவம் நதியாகவே மாறிவிடும் என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்!
ஏன் தாமிரபரணியை காக்க நான் மட்டும்தான் போராட வேண்டுமா? மற்றவர்கள் முன்வர மாட்டார்களா? ஏன் அவர்களும் தானே இன்று இந்த நதியை பயன்படுத்துகிறார்கள் என்று நாம் கேட்கலாம். மற்றவர்களைக் காட்டிலும் உற்றவர்களுக்குத் தானே உரிமைகள் அதிகம் என்கிற அடிப்படையில் நாம் முதலில் முன்னின்று போராட ஆயத்தமாவோம், போராட முன்வரும் மற்றவர்களையும் நம்மோடு அரவணைத்துச் சொல்வோம்.
தாமிரபரணி தூய்மை விஷயத்தில் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நம் வரலாற்றை நாம் இழக்கிறோம் என்று தான் அர்த்தம்.
நதிக்கரை நாகரிகத்திற்கும், வேளாண்மைக்கும் சொந்தக்காரர்களாகிய தேவேந்திரகுல வேளாளர்கள் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்! பொறுமையை மீட்போம்!
உலகிற்கு உணவளித்த வேளாளர்களும் நாங்கள் தான்! அரசாண்ட பாண்டியர்களும் நாங்கள் தான்! என்பதை உலகிற்கு எடுத்துரைப்போம்.
கணினி துறையானது வளர்ச்சியை கொண்டு வருமே தவிற, வயிற்றுப் பசியை போக்க உதவாது .எனவே இன்றல்லது என்றாவது ஒருநாள் வேளாண்மை போற்றப்படும் வேளாளர்களாகிய நாமும் போற்றப்படுவோம் என்கிற உயர்ந்த உள்ளத்துடன் வேளாண்மையை காப்போம், அதற்காக பொருநையை மீட்போம்!
மல்லல் மகேஷ்
புதிய தமிழகம் கட்சி
தகவல் தொழில்நுட்ப பிரிவு
Very very nice history in devendrakula velalar community I’m Karthik devenran Salem ATTUR Tamil..